
உயர்ந்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப, முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களையும் உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணம் 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணம் 100 ரூபாயாகவும் திருத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த எல். ரோஹண பெரேரா, கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதத்திலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கு ஏற்ப அன்றாடம் நுகரும் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கடும் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த புதிய கட்டணத் திருத்த யோசனையைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களில் அவர்களின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், கட்டண மீட்டரை திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி கட்டாயமாகக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இல்லையெனில் இந்தத் தொழிலைக் கொண்டு நடத்த முடியாமல் முற்றிலும் நிர்க்கத்தியான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.












