
விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞனின் இதயத்தை, 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்குப் பொருத்தும் இதய மாற்று அறுவை சிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சையாகப் பதிவாகியுள்ள இச்சத்திரசிகிச்சை, இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான விசேட வைத்தியக் குழுவினரால் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவனின் இதயம் மிக மோசமாகப் பலவீனமடைந்திருந்த நிலையில், மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிடின் சில நாட்களில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது.
இந்நிலையில், விபத்தொன்றில் மூளைச்சாவடைந்து கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞனின் இதயத்தைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த இதயத்தை அவசரமாகக் கொழும்புக்குக் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும், கம்பஹா பிரதேசத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக உலங்குவானூர்தி மூலம் இதயத்தைக் கொண்டு வரும் திட்டம் தடைப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் உதவியுடன் வீதி மார்க்கமாக இதயத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, பொலிஸாரின் விசேட பாதுகாப்புடன் குறித்த இதயம் உரிய நேரத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5.00 மணியளவில் ஆரம்பமான இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை, நள்ளிரவு வரை 7 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததுடன், சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை சில வருடங்களுக்கு முன்னர் கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போதைய இச்சத்திரசிகிச்சை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சையாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.







.jpg)




