சீரற்ற காலநிலையால் 19 மாவட்டங்களில் 21,356 பேர் பாதிப்பு – 6 பேர் உயிரிழப்பு; மூவர் மாயம்!



நாட்டின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 137 பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் ‘அர்னாப்’ புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை (01) வரையிலான காலப்பகுதியில் பதிவான இந்த அனர்த்தங்களினால் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் வெள்ளப் பெருக்கு மற்றும் நீரில் மூழ்கியதன் காரணமாக புத்தளம் மாதம்பே பகுதியில் 56 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை அகலவத்தை பகுதியில் 50 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பகுதியில் 36 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தங்களின் விளைவாக 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 35 குடும்பங்களைச் சேர்ந்த 125 நபர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரி மாவட்டமே மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாகப் புத்தளம் மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களின் 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், அது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தொகுதி இலங்கைக்குள் நுழைவதற்கான எவ்வித வாய்ப்புகளும் இல்லை எனவும், நாட்டின் உட்பிரதேச காலநிலைக்கு இதன் தாக்கம் மிகவும் குறைவாகவே காணப்படும். இந்த காலநிலை அமைப்பானது இந்தியாவின் ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய கரையோரப் பகுதிகளை நோக்கியே நகர்ந்து செல்கிறது.

ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை:

இந்தக் காற்றழுத்த அமைப்பினால் நாட்டின் தரைப்பகுதிக்கோ அல்லது நாட்டைச் சூழவுள்ள ஆழமற்ற கடற்பரப்புகளுக்கோ நேரடிப் பாதிப்புகள் இல்லாதபோதிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறு அறிவித்தல் வரும் வரை குறித்த ஆழ்கடல் பகுதிகளுக்குப் படகுகளைச் செலுத்துவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளைப் பொறுத்தவரையில், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும், மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.

காற்று ஒரு குறிப்பிட்ட திசையின்றி வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும். இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மாலை நேர இடியுடன் கூடிய மழையும் அதிகரித்துவரும் பகல் நேர வெப்பமும்:

தற்போது நாட்டில் நிலவும் காலநிலையானது புயலின் நேரடித் தாக்கம் அல்ல எனவும், இது வழமையான இடைப் பருவமழைக்குரிய பண்புகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் குறிப்பாகப் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், பகல் வேளையில் காற்றின் வேகம் குறைவாகக் காணப்படுவதாலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படுவதாலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பகல் வேளையில் இந்த அதிகரித்த வெப்ப நிலைமை அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர அனர்த்த உதவிகள் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.