
பாணந்துறை பேரூந்து நிலையத்தின் அருகே ஒபாதாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தின் நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனியார் பேரூந்து நடத்துநர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பாணந்துறை தெற்குப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று பாணந்துறை பேரூந்து நிலையத்திற்கு அருகில் இந்தக் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று பாணந்துறை தெற்குப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 21 மற்றுமட 27 வயதுடைய ஹிரான கொரகன மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பேரூந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாய்தர்க்கமே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் பாணந்துறை தனியார் பேரூந்து நிலையத்தில் நீண்ட தூரப் பயணிகளிடம் பாதுகாப்பு பணம் அல்லது மாமுல் வசூலிப்பதன் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் அவ்வாறான எந்தவொரு பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கான் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்குப் பொலிஸ் பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.












