
எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பொருளாதார நிபுணர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சிரிமெவன் கொழும்பகே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாட்டில் நிலவிய சுமார் 5 சதவீதப் பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாகப் பேணி முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய புள்ளிவிபரத் தரவுகளின்படி, இவ்வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 முதல் 4 சதவீத மட்டத்திலேயே காணப்படும் என்பது தெளிவாகியுள்ளது. எதிர்வரும் 2027, 2028 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகம் 3 சதவீத அளவிற்குக் குறையும் எனவும் அவர் எதிர்வுகூறினார்.
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் 8 சதவீத வளர்ச்சி வேகத்தைத் தாண்டிய சந்தர்ப்பங்கள் இரண்டு மட்டுமே பதிவாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டிலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010 - 2011 ஆகிய ஆண்டுகளிலும் மாத்திரமே அவ்வளர்ச்சி எட்டப்பட்டது. இருப்பினும், அத்தகைய உயர் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவது கடினமாக இருந்ததாகவும், கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் முதலீடுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்து இன்றளவில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், சர்வதேச ஒப்பீடுகளை முன்வைத்த அவர், 1960 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் தனிநபர் வருமானம் 156 டொலராகவும், இலங்கையின் தனிநபர் வருமானம் 146 டொலராகவும் ஏறக்குறைய சமநிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இன்று தென் கொரியாவின் தனிநபர் வருமானம் சுமார் 36,200 டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த ஆண்டில் 5,002 டொலராக மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் தென் கொரியாவின் தனிநபர் வருமானம் இலங்கையை விடக் குறைந்தபட்சம் ஏழு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.












