2027 முதல் தரம் 6 பாடத்திட்டத்தில் தொழில்முனைவு, நிதிசார் கல்வி அறிமுகம் – பிரதமர்!



ஒரு நாட்டில் புத்தாக்கப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது பாடசாலைக் கல்வியிலிருந்தும் வகுப்பறையிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் ஆக்கங்கள் மற்றும் சிறிய கருத்திட்டங்களைக் காட்சிப்படுத்துவதற்கும், உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான செயன்முறை அனுபவங்களை வழங்குவதற்கும் மாதிரிச் சந்தையொன்றை (Model Marketplace) உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்ற தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் (NIBM) பொன்விழாவுக்கு இணைவாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘புத்தாக்க வியாபார மாதிரி விருதுகள் (BIBMA) 2026’ இறுதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

புத்தாக்க வியாபார மாதிரிகளுக்காக ஒன்பது பிரிவுகளின் கீழ் விருதுகள், விசேட பாராட்டு விருதுகள், வெண்கல, வெள்ளி மற்றும் தங்க விருதுகள் இங்கு வழங்கப்பட்டன.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“ஒரு நாட்டின் பொருளாதார வலு என்பது தற்போதுள்ள வளங்களில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. புதிய வாய்ப்புகளை இனங்கண்டு, புத்தாக்கச் சிந்தனைகளைச் செயன்முறை ரீதியான பொருளாதார மற்றும் சமூகப் பெறுமதிகளாக மாற்றும் ஆற்றலிலேயே அது தங்கியிருக்கிறது.

கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 பாடத்திட்டத்தில் தொழில்முனைவு மற்றும் நிதிசார் எழுத்தறிவை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயினும், அனைத்துப் பிள்ளைகளையும் தொழில்முனைவோராக மாற்றுவது எமது நோக்கம் அல்ல; மாறாக, பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கும், விழிப்புணர்வுடன் கூடிய நிதிசார் தீர்மானங்களை எடுப்பதற்கும், புதிய நிதி மோசடிகள் மற்றும் சுரண்டல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் தேவையான அறிவையும் தன்னம்பிக்கையையும் ஒவ்வொரு மாணவரிடமும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

அதேபோன்று, மாணவர்களின் ஆக்கங்கள் மற்றும் சிறிய கருத்திட்டங்களைக் காட்சிப்படுத்துவதற்கும், உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான செயன்முறை அனுபவங்களை வழங்குவதற்கும் மாதிரிச் சந்தையொன்றை (Model Marketplace) உருவாக்குவது தொடர்பில் கைத்தொழில் அமைச்சுடன் கலந்துரையாடினோம். இதற்கு அமைச்சரினதும் பிரதி அமைச்சரினதும் இணக்கம் கிடைத்துள்ளதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அத்துடன், புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட செயன்முறைக் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்காக 2026 முதல் 2028 வரையான மூன்று கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்பாடு சார்ந்த 100 வர்த்தகக் கற்றல் நிலையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் முதற்கட்டமாக, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 25 நிலையங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் பொருளாதார மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்குப் புதிய தொழில்முனைவுகள் (Start-ups), நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (MSMEs / SMEs), பாரிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் அரச தொழில்முயற்சிகள் ஆகியன வினைத்திறனானதும் போட்டித்தன்மை மிக்கதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் பங்காளிகளாக அமைய வேண்டும். அதேபோன்று, பணியாளர் நலன்புரி, சமூகம் மற்றும் சுற்றாடல் ஆகியவற்றின் மீது பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அன்றாட வியாபாரத் தீர்மானங்களில் உள்வாங்கிக்கொள்வதும் அவசியமாகும்.

எந்தவொரு மட்டத்திலான வியாபாரமும் வளர்ச்சியடையக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் வகிபாகம் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதற்காக அறிவு, திறன்கள், தொழில்நுட்பம், நிதி மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, NIBM தலைவர் கலாநிதி சிந்தக்க பெரேரா, NIBM பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.ஏ. குலசூரிய ஆகியோர் உள்ளிட்ட விருது பெற்ற தொழில்முனைவோர், அதிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.