
மட்டக்களப்பு கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு புதன்கிழமை (25) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் அமர்வு புதன்கிழமை (25) தவிசாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
சபை சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட புதன்கிழமை (25) அமர்வில் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது சபைத் தவிசாளரினால் 2027ம் ஆண்டுக்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிராக 08 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இதில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 10, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03, சிறிலங்கா முஸ்லீம் கங்கிரஸ் 04 உறுப்பினர்கள் என மொத்தமாக 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 04, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 04 என மொத்தமாக 08 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தமது பதவியில் இருந்து விலகியதன் காரணமாக குறித்த அமர்வுக்குக் கலந்துகொள்ளவில்லை.
அந்த அடிப்படையில் கோராளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027க் கான பாதீடு மேலதிக 09 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027ம் ஆண்டுக்கான மீண்டெழும் வருமானமாக ரூபா 366,955,000.00 உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டெழும் செலவாக ரூபா 366,954,100.00 உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், வட்டார அபிவிருத்திகளுக்காகாக சபையின் நிதியூடாக ரூபா 115,301,000.00 ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் பல்வேறு செயற்திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்காக ரூபா 450,000.00, கற்பினித் தாய்மார்களுக்காக ரூபா 500,000.00, முதியோர்களுக்காக ரூபா 500,000.00, பெண்தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்காக ரூபா 400,000.00, கடும் நோயாளர்களுக்காக ரூபா 50,000.00, அனர்த்த நிவாரணங்களுக்காக ரூபா 500,000.00, கல்வி நடவடிக்கைகளுக்காக ரூபா 900,000.00 என ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







.jpg)




