
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் என்ற பெயரில் இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டுவந்து, நாட்டின் 220 இலட்சம் மக்கள் மீதும் சட்டப்பூர்வமாக அரச பயங்கரவாதத்தைத் திணிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டம், கல்லெல குசும்மகம ஸ்ரீ சுபோதிராஜாராம விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சீமெந்து பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைத்து, நிறைவேற்று அதிகாரமே 'பயங்கரவாதி யார்' என்பதை வரையறுக்கும் வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்களின் ஆடை, சிகை அலங்காரம் மற்றும் பச்சைக்குத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் எவரையும் பயங்கரவாதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் முத்திரை குத்தும் அதிகாரத்தை அரசாங்கம் தன் கையில் எடுத்துள்ளது.
நாட்டு பிரஜைகளின் மத நம்பிக்கை, கருத்துச் சுதந்திரம், கூட்டங்களைக் கூட்டுதல் மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பதே இச்சட்டங்களின் நோக்கம். சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தனி கட்சி ஆட்சியை ஸ்தாபித்து ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அமைகிறது.
அரசியலமைப்பில் புத்த சாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அந்தஸ்தையும், ஏனைய மதங்களுக்குரிய அங்கீகாரத்தையும் சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புத்த சாசன அமைச்சையும் ஏனைய மதங்களுக்கான இராஜாங்க அமைச்சுகளையும் அமைத்துள்ளார். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அவற்றை திணைக்களங்களாகச் சுருக்கியதுடன், தற்போதைய அரசாங்கம் பிக்குகளின் காவி உடையிலும் கை வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
கோஷமிடும் பௌத்தர்களை போல் நாம் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் அனுகூலங்களைப் பெற முயல்கின்றவர்கள் அல்ல. இது வரை நடந்த சம்பவங்களுக்கு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி இதுவரையில் மன்னிப்புக் கேட்கவில்லை. பெளத்தர்களாக மதத்தை பாதுகாக்கும் அதேவேளை இனவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்து, அனைத்து மதங்களையும் மதிக்கும் முற்போக்கு தேசியவாதத்தை முன்னிறுத்தி அனைத்து மதங்களுக்கு இனங்களுக்கும் மதிப்பளிப்பக்க வேண்டும் என்றார்.












