23 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை – கண்டி, கேகாலையில் மண்சரிவு அபாயம்!



தற்போது நாட்டில் இரண்டாவது இடைப்பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவுவதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் குறிப்பாகப் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டின் 23 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை, நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளைப் பொறுத்தவரை, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையும், மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி, மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். காற்றின் வேகம் பொதுவாக மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை காணப்படும் எனினும், காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் மழையால் கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொகுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யாட்டியாந்தோட்டை, மாவனல்லை, ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும், கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல, அரநாயக்க மற்றும் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.