ராகமவில் 2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!



ராகம பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் சனிக்கிழமை (7) மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 2 கிலோகிராம் 14 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளைத் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையை தொடர்ந்து சந்தேபகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களுக்கு அமைவாக, குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டாவது சந்தேகநபர் கொலன்னாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடைய பேலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.