ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு மூன்று மாதங்களில் ரூ.3,560 கோடி நட்டம் – நிதி அமைச்சு தகவல்!



மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள், மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு 2026 - 2027 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் தேசிய விமான சேவை வரியிடுவதற்கு முன்பாக 35.6 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத அறிக்கைகளின்படி, முந்தைய நிதியாண்டின் தொடர்புடைய காலகட்டத்தில் ஈட்டப்பட்ட 62.6பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், இக்காலப்பகுதியில் விமான நிறுவனம் 82.8பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. வருமானம் அதிகரித்த போதிலும், செலவினமானது 67.8 பில்லியன் ரூபாவிலிருந்து 95.2 பில்லியனாக உயர்ந்து 40.4 சதவீதம் அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களால் விமான எரிபொருள் செலவுகளில் 93 சதவீத அதிகரிப்பே செலவினங்களின் இந்தத் திடீர் உயர்வுக்கு முதன்மைக் காரணமாகியுள்ளதோடு அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் வீழ்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தங்கள் இக்காலாண்டில் 12.5 பில்லியன் ரூபா நட்டத்திற்கு காரணமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கட்டமைப்புச் பலவீனங்கள், பணப்புழக்கக் கட்டுப்பாடுகள், உயர் பராமரிப்புச் செலவுகள் மற்றும் விமான நிறுவனத்தின் கணிசமான கடன் சுமை ஆகியவை அதன் நிதி நிலைத்தன்மையைப் பாதிக்கும் முக்கிய சவால்களாக உள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் எடுத்துரைத்துள்ளது.

விமான நிறுவனத்தின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கமும் தலையீடு செய்ததோடு 175 மில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, மார்ச் 20 அன்று 126.5 மில்லியன் டொலர் வங்கிப் பொறுப்பு அரசாங்கத்தின் கடன் இருப்புக்கு மாற்றப்பட்டது.

விமான நிறுவனத்தின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் 30 மில்லியன் டொலர் வழங்கப்பட்டபோதும் விமான நிறுவனத்தின் தற்போதைய நிதிச் சிக்கல்கள் நீண்ட கால நட்டங்கள் மற்றும் சர்ச்சைகளை தொடர்ச்சியான நெருக்கடிகளுக்கு காரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.