இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 3.6 கிலோ ஹெரோயின் பறிமுதல் – 7 வெளிநாட்டவர்கள் கைது!



சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகிலிருந்து 3.6 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டிந்ததுடன், நேற்று (27) அது திக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

குறித்த படகில் இருந்த ஏழு வெளிநாட்டுப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமான கொடியின்றிப் பயணித்துக் கொண்டிருந்த இந்தப் படகு, மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை 379 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.