
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன் கருவிகள் மற்றும் 16 மைக்ரோபோன்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை இந்தப் பொருட்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த ட்ரோன் கருவிகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் அனுமதி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஆகியவை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தேவையான அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் வரை 39 ட்ரோன் கருவிகளும் சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்படும் என சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நேற்று 8ஆம் திகதி காலை 11.23 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-307 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்










.jpg)

