கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறியது!



அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில், குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தில் விரிவடைந்து வரும் பின்னணியிலும், இலங்கையில் சீனாவின் பிரசன்னத்திற்கு அவ்விரு நாடுகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும், கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தெற்காசிய வர்த்தக மற்றும் விநியோக மையத் திட்டத்திலிருந்து சீனாவின் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியேறியுள்ளது.

இத்திட்டத்தில் 70 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த சீன நிறுவனம், வெளிப்புறச் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் வர்த்தக ரீதியான காரணங்களை மேற்கோள்காட்டி கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி இத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை ஒக்டோபர் 19 ஆம் திகதி உறுதிப்படுத்தியது. கொழும்புத் துறைமுகத்தில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான கரிசனைகள் மற்றும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதமையே அரசாங்கம் இத்திட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான தனது நெருக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் சீன நிறுவனத்தை வெளியேற நிர்ப்பந்தித்துள்ளதாகவே புவிசார் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். தற்போதைய இணக்கப்பாட்டின் கீழ், இலங்கை துறைமுக அதிகாரசபை அந்நிறுவனத்திற்கு 21.9 மில்லியன் டொலர்களை இழப்பீடாகச் செலுத்தி, போட்டித் தன்மையிலான கேள்விமனுக் கோரல் மூலம் புதிய முதலீட்டாளரை உள்வாங்க திட்டமிட்டுள்ளது.

சீனாவின் ஒரு மண்டலம் ஒரு பாதை திட்டத்தின் கீழ் 50 வருட கால கட்டமைத்து, இயக்கி, கையளிக்கும் அடிப்படையில் கொழும்பு துறைமுக நகர் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. 2022 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னர், 2023 இல் அறிவிக்கப்பட்ட முதலாவது பாரிய வெளிநாட்டு முதலீடு இதுவாகும். இதற்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் 15 வருட வரிச்சலுகை வழங்கப்படவிருந்தது. ஆனால், 2023 மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரசாங்கம் இவ்வரிச்சலுகைகளை இரத்துச் செய்தது.

இந்த வெளியேற்றம் ஒரு சாதாரண வர்த்தக முடிவல்ல என்பதும், இதன் பின்னணியில் புவிசார் அரசியல் அழுத்தங்கள் உள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் பிராந்திய பிரதித் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி. வோவெல் கடந்த செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 1 வரை இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்தே சீன நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் விநியோகக் கட்டமைப்புகளில் சீனாவின் தலையீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ச்சியாகக் கரிசனையுடன் நோக்கி வந்தமையால், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான அழுத்தம் அதிகரித்ததாக ஒரு பாதை ஒரு மண்டலம் திட்ட இலங்கை அமைப்பின் பணிப்பாளர் மாயா மஜூரன் தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவை இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையில் கொழும்புத் துறைமுகம் அமைந்துள்ளதோடு, இந்தியாவின் மிகப்பெரிய சரக்குப் பரிமாற்றச் சந்தையாகவும் இது விளங்குகிறது. சீனாவிற்கு எதிரான இராணுவ மற்றும் மூலோபாய நகர்வுகளில் வாஷிங்டன் மற்றும் புதுடெல்லிக்கு இத்துறைமுகத்தின் மீதான செல்வாக்கு இன்றியமையாததாக உள்ளது. மறுபுறம், அமெரிக்கக் கடற்படையின் அழுத்தங்களிலிருந்து தனது எரிசக்தி இறக்குமதி மற்றும் வர்த்தகத்தைப் பாதுகாக்க இந்து சமுத்திரத் துறைமுகங்களுக்கான அணுகல் சீனாவிற்கு மிக அவசியமானதாகும். 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்தே ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் உள்ளிட்ட பாரிய திட்டங்களில் சீனா முதலீடு செய்து வந்த நிலையில், இலங்கையைத் தனது மூலோபாயப் பின்புலமாகக் கருதும் இந்தியா, சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் தனது அயலகத்திற்கு முதலிடம் கொள்கையின் ஊடாக மாற்று முதலீடுகளை வழங்கி வருவதாக புதுடெல்லியின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான 'ஒப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.