
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், முன்நிலை சோசலிசக் கட்சியின் ஆதரவுபெற்ற மக்கள் போராட்ட இயக்கம் பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து பேரணியொன்றையும் முன்னெடுத்தது. அத்துடன் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.
இப்பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் உடனடியாகத் தலையிடக் கோரி முறைப்பாடுகள் வழங்கப்பட்டதையடுத்து, ஐ.நா அமைப்பினால் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழு நடத்திய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட 31 பக்க அறிக்கையில், புதிய சட்டமூலங்களின் சில பிரிவுகள் சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் இது குறித்துத் தமது கடும் கவலையை வெளியிட்டுள்ளன.
கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது எழுந்த கடும் எதிர்ப்புகளையும் மீறி, அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதை நிறைவேற்றியது. இருப்பினும், இம்முறை எழுந்துள்ள தீவிரமான சமூக எதிர்ப்புகள் மற்றும் நீதிமன்ற நகர்வுகள் காரணமாக அரசாங்கம் சற்றே பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் 3 முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது:
சந்தேக நபர்களைப் பொலிஸ் காவலில் வைக்கும் நேரத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைத்தல். குற்றவாளிகளை அடையாளம் காணும் பச்சைக் குத்துதல் தொடர்பான விதியை முழுமையாக நீக்குதல் மற்றும் மதுவரிச் சட்டத்தின்கீழ் வரும் குறிப்பிட்ட சில குற்றங்களை புதிய சட்டமூலத்திலிருந்து நீக்குதல் என்பன அவையாகும். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இத்தீர்மானங்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தினார். நவம்பர் மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இச்சட்டமூலங்கள், தற்போது சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விவாதங்கள் டிசம்பர் வரை நடைபெறவுள்ளதால், இப் புதிய சட்டமூலங்கள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.










.jpg)

