இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!



இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் இன்று (17) அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதுடன், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில் உள்ள தானிம்பார் தீவுகளுக்கு அருகிலுள்ள பண்டா கடல் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அவுஸ்திரேலியாவின் டார்வின் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

எனினும், இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.