
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கத்தின் தாக்கத்தினால் நாளை (16) திங்கட்கிழமை நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் வானம் முகில் மூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டமான நிலைமை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்குக் கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இந்தத் தொகுதி இன்று (15) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 630 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையை விட்டு மேலும் விலகிச் சென்று நாளை மாலையளவில் தெற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக புயலாகவும், நவம்பர் 17 ஆம் திகதியளவில் தீவிர சூறாவளிப் புயலாகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












