தென் மாகாணத்தில் பரீட்சையில் சித்தியடைந்த 704 பட்டதாரிகளுக்கும் உடனடியாக ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை


தென் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 2023-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 704 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) எதிர்க்கட்சி அலுவலகத்தில், தென் மாகாண பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பரீட்சையில் தகுதிபெற்ற இந்த பட்டதாரிகளின் தொழில்சார் உரிமைகளையும் அடிப்படை மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான அரசாங்கம் அவற்றைத் திட்டமிட்டுத் தொடர்ந்து மீறி வருகிறது.

குறித்த ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 704 பேருக்கும் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான திகதிகள் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றத்தில் நிலவிய சட்டரீதியான காரணங்களை முன்னிறுத்தி, அவசர அவசரமாக எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலம் அந்நியமனங்கள் பிற்போடப்பட்டன.

எனினும், தற்போது நீதிமன்றம் சார்ந்த அனைத்துச் சட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதோடு, 2025 ஜூன் 30 வரை 2,193 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனங்களை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான கடமையாக இருக்க வேண்டும்.

இந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக இப்பட்டதாரிகள் வினாத்தாள்கள், பொது அறிவு, நுண்ணறிவு மற்றும் தத்துவார்த்தக் கற்கைகளுக்கான தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் சென்று பெருமளவிலான பணத்தைச் செலவிட்டு, கடினமான அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவ்வாறு தகுதிபெற்றவர்களுக்கு நியமனங்களை வழங்குவதாகக் கூறி பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நடவடிக்கை, தற்போது நிரந்தரத் தடையாக மாற்றப்பட்டு அவர்களது எதிர்கால வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த இழுபறி நிலையானது பிரதமர் அலுவலகத்தில் இப்பட்டதாரிகள் 'பிணைக் கைதிகளாக' பிடித்து வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற சூழலை உருவாக்கியுள்ளதோடு, அவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

பிரதமரின் செயலாளரோ அல்லது அலுவலகமோ கடிதப் பரிமாற்றங்கள் ஊடாக இதனைத் தாமதப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட 704 பட்டதாரிகளையும் உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்கோ அல்லது பிரதமர் செயலகத்திற்கோ வரவழைத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கரங்களினாலேயே நேரடியாக நியமனக் கடிதங்களை வழங்க வேண்டும்.

அரசாங்கம் இழைத்துள்ள இந்தத் தவறை உடனடியாகத் திருத்தி நியமனங்கள் வழங்கப்படும் வரை, குறித்த 704 பட்டதாரிகளின் உரிமைகளுக்காகத் தாம் முன்னின்று தலைமைத்துவம் வழங்கி உச்சகட்டப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.