கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவர் கைது!



மலேசியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட உயர் ரக சிகரெட்டுகளைக் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்திருந்த மூவர் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (27) நண்பகல் பயணிகள் வருகை முனையத்திலுள்ள 'க்ரீன் சேனல்' வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பயணிகள் மூவரைக் கடமையிலிருந்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவர்களின் பயணப் பொதிகளைத் திறந்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த மூவரும் கொண்டு வந்திருந்த 3 பயணப் பொதிகளினுள் மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட 47,000 சிகரெட்டுகள் அடங்கிய 235 கார்ட்டூன்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் சுமார் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்கவை என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் பாணந்துறை பகுதியை சேர்ந்த 23 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

நேற்று (27) நண்பகல் 12.15 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏசியா விமான சேவைக்குச் சொந்தமான ஏ.கே - 045 என்ற விமானத்தின் மூலம் கைதான நபர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த சிகரெட்டுகள் மலேசியா ஊடாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுத்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடமையாக்கியதுடன், சந்தேகநபர்கள் மூவருக்கும் 175,000 ரூபா அபராதம் விதித்துள்ளனர்.