திருக்கோவில் வலயக் கல்வி அபிவிருத்திக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி அறிவிப்பு!



திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்வி வசதிகளை மேம்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15ஆம் திகதி திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒதுக்கப்பட்ட நிதியை 2027 டிசம்பர் 31ஆம் திகதி திறைசேரிக்கு மீளனுப்ப வேண்டிய நிலை ஏற்படாத வகையில், பாடசாலைகளின் தேவைகளை உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

மேலும், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழான பணிகள் நிறைவடைந்ததும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக மேலதிக நிதியை வழங்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கல்வித்துறையை ஆசியாவில் மட்டுமன்றி உலகளவில் சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.