
சோமாவதிய தேசிய பூங்காவிற்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து, இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த நவம்பர் 02ஆம் திகதி சோமாவதிய தேசிய பூங்காவின் டோசர் பிட்டிய பகுதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பின்போது குறித்த கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அவற்றில் ஓரிடத்தில் அரை ஏக்கர் நிலமும், மற்றுமொரு இடத்தில் ஒரு ஏக்கர் நிலமும் காடுகள் அழிக்கப்பட்டு கஞ்சா பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலகம், கவுடுல்ல தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த நவம்பர் 04ஆம் திகதி ஹிங்குரக்கொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.












.jpg)