
புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடற்படை ஒத்துழைப்பு வரலாற்று ரீதியான அரசியல் தடைகளையும் சந்தேகங்களையும் கடந்து தற்போது ஒரு புதிய மூலோபாய உயர்மட்ட நிலையை எட்டியுள்ளது. புதுடெல்லியின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான 'ஒப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாறிவரும் புதிய உலகளாவிய சூழலும் பாதுகாப்பு சவால்களுமே இந்த நெருங்கிய கூட்டாண்மைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.
வரலாற்று ரீதியாக, தமிழ் மன்னர்களின் படையெடுப்புகள், 1987ஆம் ஆண்டின் இந்திய அமைதிப்படை வருகை மற்றும் தமிழ் சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடுகள் சிங்கள பௌத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
அதேபோன்று, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப்பின் இந்தியா நேரடி இராணுவ தலையீடுகளைத் தவிர்த்து வந்தது. இருப்பினும், 2009 போரின் முடிவிற்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலின் மூலோபாய முக்கியத்துவமும், இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் கடற்படைப் பிரசன்னமும் புதுடெல்லியின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்தன. இதனையடுத்து, கொழும்பு பாதுகாப்பு மாநாடு, 'மித்ர சக்தி', 'தோஸ்தி' போன்ற பயிற்சிகள் மூலமாக இரு நாடுகளும் நெருங்கிச் செயல்படத் தொடங்கின.
2021 பொருளாதார நெருக்கடிக்குப் பின் இலங்கை தனது இராணுவத்தைச் சீரமைக்கத் தொடங்கிய வேளையில், இந்தியா 6 மில்லியன் டொலர் மதிப்பிலான கடற்படை மீட்பு மையம், மிதக்கும் கப்பல் கட்டும் தளம், டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள் போன்ற நிதியுதவிகளையும் உபகரணங்களையும் வழங்கியது. இதன் உச்சகட்டமாக, 2025 ஏப்ரலில் கையெழுத்தான 5 ஆண்டுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அண்மைக்கால இலங்கை விஜயமும் இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை உணர்ந்து, தனது எல்லைகளை இந்தியப் பாதுகாப்பிற்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளதுடன், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கான தடையையும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.
இறையாண்மை தொடர்பான சில உள்நாட்டு விமர்சனங்கள் மற்றும் சீன அழுத்தம் நீடித்தபோதிலும், புதிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதுடெல்லியும் கொழும்புவும் முன்னெடுக்கும் இந்த பாதுகாப்புப் பாலம் பிராந்திய அமைதிக்கு மிக முக்கியமானதொரு அடியாகும் என புதுடெல்லியின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமானம் சுட்டிக்காட்டியுள்ளது.












