இன்றைய வானிலை


வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளுடன் இணைந்து காணப்பட்ட ஆழ்ந்த தாழ் அமுக்கமானது தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு ஈரான் நாட்டினால் முன்மொழியப்பட்ட "அக்வான்" ( AKVAN ) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "அக்வான்" என்றால் அசுரன் என பொருள்படும். இந்த "அக்வான்" சூறாவளி திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட 640 km தொலைவில் கடந்த இரவு சுமார் 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது. இது தொடர்ச்சியாக வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை 05.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் சக்தி வாய்ந்த சூறாவளியாக வலுவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் பின்னர் வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் நாளை மறுதினம் காலை 05.30 மணியளவில் மேலும் தீவிரமடைந்து மிகச் சக்தி வாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும்.

இந்த மிகச் சக்தி வாய்ந்த "அக்வான்" சூறாவளி 20ஆம் திகதி காலை 11.30 க்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜனாம் கரைகள் நெல்லூர் மற்றும் டூணி போன்ற இடங்களுக்கு இடையாக கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்கு மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.


மேலும் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் தொழில் நடவடிக்கைகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை,கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீட்டர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.