செம்மணி மனிதப்புதைகுழி விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் – நீதிமன்றத்தில் அருட்தந்தை அல்போன்சஸ் சத்தியக்கடதாசி!



கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ செம்மணி மனிதப்புதைகுழியை அடையாளம் காண்பித்த வேளையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தானும் அங்கு இருந்ததாகவும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணை செயன்முறைகளுக்குத் தேவைப்படக்கூடிய தகவல்கள், ஆவணங்கள் மற்றும் பதிவுகளை நீதிமன்றத்துக்கு அளித்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு தற்போது கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட் அவரது சட்டத்தரணிகள் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (18) சத்தியக்கடதாசியொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (19) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் தன்னிடம் பல்வேறு தகவல்களும் ஆவணங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டினால் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

நான் 1992 ஜுலை முதல் 2002 ஜுன் வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினேன். இக்காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில், குறிப்பாக ஆயுதமோதல் இடம்பெற்ற வேளையில் கல்வி, சமயம், சமூகம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டேன்.

இக்காலப்பகுதியில் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் சமாதான ஆணைக்குழுவின் தலைவராகவும் நான் பணியாற்றினேன். அதனூடாக மனித உரிமைகள், நீதி, அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஆயுதமோதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் தொடர்பான விவகாரங்களில் தீவிரமாக முன்நின்று செயலாற்றினேன்.

அதன் நீட்சியாக 1996 இலும், அதன் பின்னரான ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் அதுபற்றிய விசாரணை நடவடிக்கைகளில் நான் முக்கிய பங்கு வகித்தேன். அந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டமை மற்றும் அகழ்வு செய்யப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடைய விவகாரங்களில் எனது பங்களிப்பு மற்றும் ஈடுபாடு என்பவற்றின் காரணமாக அம்மனிதப்புதைகுழி சார்ந்த சூழ்நிலைகள் மற்றும் பின்னணி என்பன பற்றிய குறிப்பிடத்தக்க அறிவு எனக்கு உண்டு.

அதேபோன்று இக்காலப்பகுதியில் பதிவான சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் ஏனைய மிகமோசமான மனித உரிமை மீறல்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதித்துறைசார் நடவடிக்கைகளிலும் நான் பங்கேற்றேன்.

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ செம்மணி மனிதப்புதைகுழியை அடையாளம் காண்பித்தபோது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நானும் அங்கு இருந்தேன். யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் சமாதான ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியிலும், அதுபோன்ற ஏனைய அமைப்புக்களுடனான தொடர்பின் மூலமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதில் நான் முனைப்புடன் செயற்பட்டேன்.

அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்கள் முகங்கொடுத்துவந்த துயரத்தை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆயுதப்படைகளின் குடியியல் விவகார அலுவலகம் மற்றும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

குறிப்பாக இக்காலப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக் கட்டமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருக்கான கடிதங்கள் மற்றும் மனுக்களை நானே தயாரித்து, கையொப்பமிட்டு, அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். இவற்றின் ஊடாக செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய விவகாரங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் என்பவற்றை அவர்களுக்கு கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், உரிய தலையீட்டையும் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையையும் கோரினேன்.

அதேபோன்று 1995 - 2005 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், குறிப்பாக யாழ் குடாநாட்டில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோதும், அதன் பின்னரும் இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புத்தரப்பு உறுப்பினர்களால் பலர் காணாமலாக்கப்பட்டதாகவோ அல்லது கடத்தப்பட்டதாகவோ அல்லது வலுகட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டதாகவோ முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

ஒரு கத்தோலிக்க மதகுருவாகவும், நீதி மற்றும் சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் தலைவராகவும், யாழ்ப்பாண மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டிணைவின் காப்பாளர் மற்றும் ஆலோசகராகவும், சமாதானம் மற்றும் நல்லெண்ணத்துக்கான மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் என்ற ரீதியிலும் மேற்குறிப்பிட்டவாறான வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் கடத்தல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். அவர்களுக்குப் பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கினேன். அவர்களுக்காக முன்நின்று செயற்பட்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்று, அவர்களது துயரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்ததுடன் அவற்றை உரிய உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கட்டமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அக்காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய சூழ்நிலைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கரிசனைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதற்காக மத மற்றும் மனிதாபிமானப் பிரதிநிதிகள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் நான் போதிய தெளிவைப் பெற்றுக்கொண்டேன்.

செம்மணி மனிதப்புதைகுழி விசாரணை என்பது மிகமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதுடன், அது உயிரிழந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் நீதி என்பவற்றுடன் தொடர்புடையவையாகும்.

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில், வரலாற்றுச் சூழ்நிலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் நேரடிப் பங்களிப்பை வழங்கிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், ஆதாரங்கள் என்பன முறையான பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் கொண்டிருக்கும் தனிப்பட்ட அறிவு, வரலாற்று ரீதியான ஈடுபாடு, ஆவணக் காப்பகப் பதிவுகள் மற்றும் அனுபவம் என்பன தற்போது நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விவகாரம் தொடர்பான வரலாற்றுப் பின்னணியையும் சூழ்நிலைகளையும் மன்று புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சட்டபூர்வமாகத் தேவைப்படக்கூடிய உரிய தகவல்கள், ஆவணங்கள், பதிவுகள் மற்றும் உதவிகளை மன்றுக்கு வழங்குவதோடு, அவசியமான முழுமையான ஒத்துழைப்பை அளிக்க விரும்புகின்றேன்.