இலவச சுகாதாரத்தை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்தல்!



இலங்கையில் இலவச சுகாதாரம் ஒரு மனித உரிமையும் அடிப்படை உரிமையும் என்பதால், இது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட வேண்டும். எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகளைப் போலவே அறுவை சிகிச்சைகளுக்கான வரிசைகளும் உருவாகியுள்ளதால் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததைப் போலவே, விரைந்த நடவடிக்கை ஒன்றின் மூலம் சுகாதாரத்தை அடிப்படை மற்றும் மனித உரிமையாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (17) நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையின் இலவச சுகாதார சேவை தற்சமயம் மனித வளப் பற்றாக்குறை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணப் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்சமயம் நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் உட்பட, சுகாதாரத் துறையில் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பல பாரதூரமான பிரச்சினைகளும் நிலவுகின்றன. இதற்கு அப்பால், எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகளைப் போலவே அறுவை சிகிச்சைகளுக்கான வரிசைகளும் உருவாகியுள்ளன. மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

எனவே, இலவச சுகாதார சேவையின் தற்போதைய நிலைமை, அதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ள எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கின்றேன்.

இலங்கையின் இலவச சுகாதார சேவையைப் பேணிச் செல்வதற்கு அரசாங்கம் பின்பற்றும் தேசிய சுகாதாரக் கொள்கையின் பிரதான நோக்கங்களும் அதன் துறைகளும் யாவை? அக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் தற்போதைய முன்னேற்றம், எதிர்பார்க்கப்படும் இலக்குகள் மற்றும் அவற்றின் கால அட்டவணையை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

நோய்த் தடுப்பு, நோய்ச் சிகிச்சை, புனர்வாழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள பிரதான வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் யாவை?

நாடு முழுவதும் இயங்கும் அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை, அவை முதலாம் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம்நிலை சுகாதார சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள விதம் யாது? ஒவ்வொரு வகை நிறுவனத்தாலும் பெற்றுத் தரப்படும் சிகிச்சைகள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகள் யாவை?

நாடு முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட சுகாதார மனித வளங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி, தற்போது சேவையில் உள்ளோரின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 2025 ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட இருந்த ஆளணி வெற்றிடங்கள் மீளாய்வின் முன்னேற்றம் யாது? அதற்கமைய, ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

சுகாதாரத் துறை நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் ஏற்பட்டுள்ள மூளைசாலிகள் வெளியேற்றம் மற்றும் மனித வளப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை?

நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் வைத்தியசாலை வசதிகள், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய சுகாதார மனித மற்றும் பௌதீக வளங்களைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றனவா ? அந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் மக்களுக்கு சமமான சுகாதார சேவை அணுகலை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை? அவ்வாறே, வைத்தியசாலை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வளங்களில் காணப்படும் பற்றாக்குறையைக் குறைத்து, அவ்வளங்களைப் போதுமான அளவில் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்குப் பற்றாக்குறை காணப்படுகின்றனவா? அவ்வாறெனில், பற்றாக்குறையாக காணப்படும் மருந்து வகைகள் எவை? அப்பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்துள்ள விநியோக மற்றும் கொள்வனவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?என கேட்கிறேன் என்றார்.