திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு – கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் துரித நடவடிக்கை!



திருகோணமலை துறைமுகத்தில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 7.30 மணியளவில் அவதானிக்கப்பட்ட சிறிய எண்ணெய்க் கசிவிற்கு இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 7 மீற்றர் நீளமும் 2 மீற்றர் அகலமும் கொண்ட எண்ணெய்க் கறை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினரால் எண்ணெயை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எண்ணெய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், அண்மைய கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும், உறிஞ்சும் பொருட்களை மாத்திரம் பயன்படுத்தி இந்தத் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய எண்ணெய் மாசுபாட்டுச் சம்பவங்களுக்குத் துரிதமாகச் செயற்படுதல் மற்றும் கடல் சூழலைப் பாதுகாப்பதில் இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இம்முயற்சி மேலும் புலப்படுத்துகிறது.