
பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல், முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்மானம் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் வெளியிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, பரந்தளவிலான இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே அவற்றை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்கும் நோக்கம் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் மூலம் ஆட்சியில் நீடிக்கும் அரசாங்கம் நாங்கள் அல்ல” என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் ஜனநாயகத் தீர்மானத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், தேர்தலொன்றின் மூலம் மக்கள் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றத் தீர்மானித்தால் அதனை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை முன்வைத்து தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
குறித்த சட்டமூலங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இரு சட்டமூலங்களுக்கும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேலதிக கலந்தாலோசனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.









.jpg)


