‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணத்திற்கான காரணம் வெளியானது – இடைக்கால பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்!



'காவந்திஸ்ஸ ' யானையின் மரணத்திற்குக் குடல் முறுக்கம், அதனுடன் தொடர்புடைய நச்சு அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல உள்ளுறுப்புச் செயலிழப்புகளே காரணம் என கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கல்கமுவ நீதவான் ரவீந்திர ரஞ்சன் பண்டார இந்த அறிக்கையின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

யானையின் மரணத்தைச் சூழவுள்ள சந்தேகங்கள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கரிசனை வெளியிட்டிருந்த நிலையில், சர்வதேச கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக மேலதிக பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டுமென முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் இதன்போது நிராகரித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் ஆர்.ஆர்.எம்.கே.கே. விஜேசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கையே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, காவந்திஸ்ஸ யானையின் வலது காலைச் சுற்றி மூன்று நாட்களான காயங்கள் அவதானிக்கப்பட்டபோதிலும், அவற்றினுள் துப்பாக்கிச் சன்னங்களோ அல்லது தோட்டாத் துண்டுகளோ காணப்படவில்லை. எவ்வாறாயினும், பரிசோதனையின் போது யானையின் வலது வயிற்றுப் பகுதி மற்றும் மார்புச் சுவர்களில் மூன்று துப்பாக்கிச் சன்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனினும், அவை உள்ளுறுப்புகளுக்கோ அல்லது எலும்புகளுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மேலதிக கவனம் செலுத்த வேண்டிய சில கேள்விகளை எழுப்புவதாக நீதவான் இதன்போது அவதானம் செலுத்தினார்.

இதேவேளை, காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், மேலதிக பரிசோதனைகளுக்காகச் சர்வதேச கால்நடை மருத்துவக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமெனவும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும் சட்டத்தரணிகளான ரோஹித ராஜகருணா, பாலகிருஷ்ணன் பிரியங்கா ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பத்தும் பண்டார சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, காவந்திஸ்ஸவின் மரணத்திற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யானைகள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்படவில்லை எனவும், வனஜீவராசி அதிகாரிகள் தமது சட்டபூர்வ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைப் புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கால்நடை மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் காவந்திஸ்ஸ யானைக்குப் போதியளவு தொடர் பராமரிப்பும் கண்காணிப்பும் வழங்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய அவர், சிகிச்சையின் பின்னர் யானை குணமடைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டிய நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மரணம் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைக்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்ட சூழ்நிலை குறித்துக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி ரோஹித ராஜகருணா, யானை நிலத்தில் படுத்திருந்த வேளையில் அடிவயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என வாதிட்டுள்ளார்.

அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த வனஜீவராசி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்து, அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் தமது கடமைகளைச் சரியாக நிறைவேற்றினார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மிகலாவ வனஜீவராசி வட்டார அதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.எஸ். வீரக்கோன், காவந்திஸ்ஸ யானையைப் பாதுகாப்பதற்கும் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்ததாகத் தெரிவித்தார். வனஜீவராசி அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் கவனயீனக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை எனக் கூறி அவர் நிராகரித்துள்ளார்.