ரஷ்ய சட்டமா அதிபர் இலங்கைக்கு விஜயம்!



ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மொஸ்கோ நகரிலிருந்து ரஷ்யாவுக்குச் சொந்தமான விசேட விமானம் ஊடாக நேற்று (26) இரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜெனரல் அலெக்சாண்டர் குட்சனுடன் 21 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவருக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சனை வரவேற்பதற்காக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவான் ஜகர்யன் மற்றும் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது அவர் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சட்டத் துறையில் நிலவும் உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.