இலங்கை – ஜப்பான் உறவை வலுப்படுத்துவது குறித்து ஜப்பான் தூதுவருடன் சஜித் பேச்சுவார்த்தை!



இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாட்டாவும் கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சிநேகபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள், சுற்றுச்சூழல் நிலைபேறுத்தன்மை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்தல், அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவம், அத்துடன் நீலப் பொருளாதாரத்தின் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, ஜப்பானின் விரிவான தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி நவீன விவசாயம் (Smart Agriculture), கடல்சார் தொழில்கள், நிலையான மீன்பிடித்துறை, கடல்சார் அறிவியல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய அபிவிருத்தி ஆகிய துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்பப் புத்தாக்கம், திறன் மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, அனர்த்த அபாய முகாமைத்துவம், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஜப்பான் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அனுபவங்களும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன. அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தாங்கக்கூடிய அபிவிருத்தி ஆகியன இரு தரப்பினரதும் முக்கிய கவனத்திற்குரிய விடயங்களாக அமைந்தன.

இலங்கையுடன் ஜப்பான் பேணி வரும் நீண்டகால நட்புறவையும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ஜப்பான் வழங்கி வரும் பெறுமதி மிக்க பங்களிப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது பாராட்டினார்.

ஏற்கனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கை மக்களின் நலன், செழிப்பு ஆகியவற்றுக்கு பங்களிக்கும் நீண்டகால அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பு இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீடித்த நட்பு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.