வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை – விவசாய போராட்ட இயக்கம் குற்றச்சாட்டு!



வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளான உற்பத்திச் செலவு அதிகரிப்பு, இடைத்தரகர்களின் சுரண்டல், விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் நியாயமான முன்மொழிவுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என விவசாய போராட்ட இயக்கம் விசனம் தெரிவித்துள்ளது.

விவசாய போராட்ட இயக்கத்தின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விவசாய போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் விமல் வத்துஹேவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் 81ஆவது வரவு செலவுத் திட்டமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சுமார் ஐந்து மணித்தியாலங்கள் நீடித்த உரையில், நாட்டின் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்தகட்டமாக உற்பத்தியை அதிகரித்து பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எனினும், 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கையில் இதுவரை எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் உயர் வருமானம் பெறுவோருக்கும் சாதகமான சூழலை உருவாக்குகின்றன.

நுண்நிதிச் சட்டமூலம், முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களின் கடன் சுமையை நீக்குவதற்குப் பதிலாக, கடன் வழங்கும் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தில் 110 முதல் 129 வரையான பக்கங்களில் விவசாயக் காப்புறுதி, ஓய்வூதியம், ஒவ்வொரு 350 விவசாயக் குடும்பங்களுக்கும் ஒரு விவசாய ஆலோசகர், சலுகை விலையில் இயந்திர உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், ஐந்து பயிர்ச்செய்கைப் பருவங்கள் கடந்தும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உரிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படவில்லை.

நெல், மரக்கறி, பழ உற்பத்திகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. உரம், விதைகள், விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்களின் விலைகள் விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக உள்ளன. உற்பத்திக்குப் பின்னர் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு அவற்றைக் கொள்வனவு செய்து விவசாயிகளின் வருமானத்தைச் சுரண்டுகின்றனர்.

விவசாயத்துக்காக வருடாந்தம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மானியங்கள் ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலப்பரப்பில் 13.8 சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதுடன், தொழிலாளர் படையில் 12.3 சதவீதமானோர் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 10.8 சதவீதமாகும்.

உலக நாடுகள் உணவுப் பாதுகாப்பையும் உணவு இறைமையையும் உறுதிப்படுத்த விவசாயிகளுக்கு நேரடி மானியங்களை வழங்குகின்றன. ஆனால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சிறு விவசாயிகள், சிறியளவிலான மீன்பிடித் தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடி நிதி மானியங்கள் வழங்கப்படவில்லை என்றார்.