தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அறிவிப்பு!



அரச நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை (NISD) களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கப்படும் கால எல்லை தொடர்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, களனிப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து தற்போது செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2இன் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனம் அல்ல; அது அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புடைய நிறுவனமாகும். எனவே, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்பு இதற்குப் பொருந்தாது. அதற்கமைய, அரச நிறுவனமொன்றாக இந்நிறுவனத்தை எவ்வாறு பல்கலைக்கழகத்துடன் இணைக்கலாம் என்பது குறித்தே நாம் பரிசீலித்து வருகிறோம்.

பல்கலைக்கழகமொன்றுடன் ஏதேனுமொரு நிறுவனத்தை இணைப்பதற்கான சட்டரீதியான நடைமுறை, 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய மாற்று வழிமுறைகள் மட்டுமன்றி, இணைப்பின்போது தற்போதுள்ள ஊழியர்களைப் பல்கலைக்கழகத்தில் உள்வாங்க வேண்டிய விதம் தொடர்பாகவும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் தொடர்பான சாத்தியவள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 மார்ச் 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், NISD நிறுவனத்தைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில், இந்நிறுவனத்தைக் களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சாத்தியவள ஆய்வின் பின்னர், அந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கும் செயற்பாடு தொடர்பில் களனிப் பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்க முடியும் என ஆணைக்குழு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இவை கல்விசார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விடயங்கள் என்பதால், இவை தொடர்பான பல்கலைக்கழக மட்டத்திலான தீர்மானங்கள், களனிப் பல்கலைக்கழகத்தின் செனட் சபை மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்படும்.

பல்கலைக்கழகம் அந்த உள்ளகக் கலந்தாலோசனைகளை நிறைவு செய்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும், என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.