ரணில் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டதாகக் கூறுவது பொய் – நளிந்த ஜயதிஸ்ஸ


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டதாகவும், நல்லதொரு பொருளாதாரக் கையிருப்போடு நாட்டைத் தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்ததாகவும் கூறப்படுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது முற்றிலும் பொய்யாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டில் நாடு கடன் செலுத்த முடியாமல் வங்குரோத்தடைந்திருந்து என்பது தெளிவான உண்மையாகும். ஆனால், தற்போதைய அரசாங்கம் 2024இன் பின்னரே ஆட்சியைப் பொறுப்பேற்றது. ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தி நல்லதொரு கையிருப்போடு நாட்டை வழங்கியதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவ்வாறாயின் சர்வதேச பொருளாதாரத் தரப்படுத்தல்களில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

2017இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் அரசாங்கத்தின் மொத்த வருமானத்திற்கும், கடன்களுக்கான வட்டிச் செலவுகளைத் தவிர்த்த ஏனைய செலவுகளுக்கும் இடையிலான நேர்மறையான வேறுபாடு குறைவாகவே இருந்தது. அவ்வாறு அன்று திறைசேரி நிரம்பியிருந்தமை உண்மையென்றால் அக்காலப்பகுதியில் ஏன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை?

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டைப் பொறுப்பேற்று, பல பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்குத் தேவையான சம்பள அதிகரிப்புகளையும் நிவாரணங்களையும் தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வழங்கி வருகிறது. எதிர்காலத்திலும் இவ்வாறான நேர்மறையான செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.