கொழும்பில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற மக்கள்; சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான கோட்டையாக விளங்கியது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியல் தொகுதியான அங்கு, கடந்த தேர்தலில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மக்களை எந்தளவுக்கு பொய்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
இலங்கை நீண்டகால வரலாற்றையும், உலகையே வியக்கவைக்கும் யோத எல, பராக்கிரம சமுத்திரம் போன்ற பிரமாண்டமான நீர்ப்பாசனப் படைப்புகளையும் கொண்ட நாடாகும். இவ்வாறான பெருமைமிக்க நாட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷ மகத்தான சேவைகளை ஆற்றினார்.
அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களால் நாடு பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தது. அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் முன்னெடுத்தார்.
மஹிந்த ராஜபக்ஷவைத் திருடன் எனச் சித்திரித்து, நாட்டை அழித்துவிட்டதாக மக்களின் மனங்களில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி அவரைத் தோற்கடித்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டு ஆண்டுகள் நாட்டை முடக்க வேண்டியிருந்தது. இதனால் அரசாங்கத்தின் வருமான வழிகள் பாதிக்கப்பட்டு எரிபொருள், மின்சாரம், எரிவாயு விநியோகத்துக்கான நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலைமை மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகவே ஏற்பட்டது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னைய தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவற்றை நூறு சதவீதம் நிறைவேற்றிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே.
நாமல் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, அநுர குமார திசாநாயக்க நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தினார். அக்கூட்டங்களில் குளங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார். ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்காக ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து விலகிய காலத்தில் நாட்டின் வறுமை விகிதம் ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் இன்றி அவரைச் சிறையில் தடுத்து வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலாகும்.
நாட்டின் வறுமையை அதிகரிப்பதும், சட்டமின்மையை உருவாக்குவதும், முதலீடுகளைப் பாதிப்பதும் தற்போதைய ஆட்சியின் விளைவுகளாகும். அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.
எதிர்காலப் பொருளாதாரத்தையும், புதிய உலகின் தொழில்நுட்ப மாற்றங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவை. அந்தத் தலைமைத்துவத்தை வழங்கக்கூடியவராக நாமல் ராஜபக்ஷ விளங்குகின்றார் என்றார்.


.jpg)










