
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காணாமல்போன வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள், தற்போது கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிக்கொடுவாவத்தை பகுதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் பட்டறை ஒன்றில், காணாமல்போன இளைஞன் மேலும் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதன் பின்னர் குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதுடன், அவருடன் மது அருந்திய நபர்களும் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது கடந்த வெள்ளிக்கிழமை (30) மாபோல கருப்பு பாலம் அருகில் ஒருவரும், மஹர பகுதியில் மற்றொருவருமாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வெல்லம்பிட்டி மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் போது கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள வாகன பழுதுபார்க்கும் பட்டறையில் வைத்து அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், அவரது உடல் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாப்பிலியாவல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய உடல் பாகங்கள் மற்றும் எலும்புகள் கொஸ்கம பொலிஸ் பிரிவில் உள்ள ரன்வல பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல்கள் பூகொட நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பூகொடை நீதவான் மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில், கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.
மோட்டார் சைக்கிள் சாவி, தாயத்து , மனித எலும்புத் துண்டுகள் மற்றும் எரிக்கப்பட்ட கூடாரத் துணி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு வழக்குச் சான்றுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீதாவக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவிசாவளை நீதவான் மற்றும் கடற்படை உதவியுடன் ரன்வல பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தின் அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் இன்று திங்கட்கிழமை (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருகின்றனர்.












