நாடளாவிய பணிப்புறக்கணிப்பு – பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் பணிப்புரை!



கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாகப் பொதுமக்களுக்கான சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அரச நிறுவனங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அபிவிருத்திப் பணிகளோ அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஏனைய சேவைகளோ மந்தமடையாத வகையில் அரச துறைச் சேவைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அமைச்சுக்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரைகள் அனுப்பப்பட்டுள்ளது.

உத்தேச தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் திகதி பாடசாலை தவணை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை எவ்வித இடையூறுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மாகாணக் கல்வி அதிகாரிகளிடமும் பாடசாலை அதிபர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கான முன்னேற்பாடுகள் தொழிற்சங்க நடவடிக்கையினால் பாதிக்கப்படாத வகையில் உறுதிப்படுத்துமாறும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைகளை நடத்துமாறும் பரீட்சைகள் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, தடையற்ற சேவைகளைப் பேணுமாறு சுகாதாரத் துறைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பைக் கோரியிருந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்துடன் நடத்தப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்று அச்சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்றும், அவ்வாறான அதிகரிப்புகள் அடுத்த வரவு, செலவுத் திட்டத்திலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.