
குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டை உருவாக்க முடியாது எனவும், மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் என பௌத்த போதனையில் குறிப்பிடப்பட்டுள்ளமையிலிருந்து பௌத்த தர்மம் எவ்வளவு நடைமுறைச் சாத்தியமான தத்துவம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று (28) ஆரம்பமான உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது பௌத்த போதனையின் விடயங்களை எடுத்துக்காட்டி மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
"எந்தவொரு அரசினதும் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமற்ற தன்மை தீர்மானிக்கப்படுவது நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலாகும்.
ஆட்சியாளர் தர்மவந்தராக இருந்தால், ஆட்சியாளர் கொள்கைப்பற்றுள்ளவராக இருந்தால் நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும். ஆட்சியாளர் ஊழல்வாதியாக இருந்தால், அதர்மவாதியாக இருந்தால் முழு நாடும் அராஜகமாகிவிடும்.
இந்த விடயம் சகலவிதமான அரசுகளுக்கும் பொருந்தும். அதனால்தான் பௌத்த தர்மம் நடைமுறைச் சாத்தியமானதும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதுமான தர்மமாகத் திகழ்கிறது" எனத் தெரிவித்தார்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.
இதில் உலக பௌத்த சங்க சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 நாடுகளின் தலைமைத் தேரர்கள், பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
1966 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் நோக்கம் உலக அமைதியாகும்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாகானந்த ஆய்வு நிறுவனத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 'உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா' உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 11 ஆவது பொதுச்சபையின் 02 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல மத வழிபாட்டு நிகழ்வுகள் நாளை முதல் டிசம்பர் 02 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.







.jpg)




