வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் – ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!



தமிழர் தாயகத்தின் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் கனத்த இதயங்களுடன் கண்ணீர் மல்க மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

அத்துடன் பாராளுமன்றத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழங்களிலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் நேற்றுக்காலை முதலே மஞ்சள், சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாவீரர்களைப் போற்றும் பாடல்கள் ஒலிபரப்பட்டவாறு நினைவேந்தலுக்கான விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாலை 6.05மணிக்கு நினைவொலி எழுப்பபட்டு, 6.06மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து 6.07இற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பட்டது. அதனைத்தொடர்ந்து விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களுக்கான அஞ்சலியை சிறுவர்கள் முதல் அனைத்து பொதுமக்களும் உணர்வுபூர்வமாகச் செலுத்தினர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.

மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக வித்தாக்கிய தாயான செல்லத்தம்பி சரோஜாதேவி பொதுச்சுடரை ஏற்றியதைத்தொடர்ந்து ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் மற்றும் கல்லறைக் கல்வெட்டுக்களுடன் கூடிய நினைவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கண்கான பொதுமக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்வெட்டு வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்திப்பட்டது. தொடர்ந்து மூன்று பெண் மாவீரர்களின் தாயாரான இராசரத்தினம் புஸ்பராணியால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் பெற்றோர் உரித்துடையோரால் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை கடலில் காவியமானோர் நினைவாகவும் சம நேரத்தில் ஈகைச்சுடர் கடற்கரும்புலி மாவீரரின் தாயார் யேசுராசா அருளம்மாவால் ஏற்றப்பட்டுள்ளது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குடியிருப்பதனால் அதற்கு முன்னாள் உள்ள வளாகம் ஒன்றில் மாதிரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னி அல்லது பாமா மற்றும் மாவீரர் யூட் ஆகியோரது தாயார் செல்வமாணிக்கம் வள்ளிப்பிள்ளை பொது ஈகைச் சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்வியங்காடு, வேளாதோப்பு பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாக இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வலிகிழக்கு பிரதேசபை தவிசாளர் தி.நிரோஸ், யாழ்ப்பாண மாநகர சபை பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், யாழ் மாநகரசபை உறுப்பினர் மயூரன் உள்ளிட்ட வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது சி.வி.கே சிவஞானம் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

மேலும் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலும் நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான மாவீரர்நள் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது, பிராதான சுடரை மூன்று மாவீரர்களின் தயாரான தம்பிப்பிள்ளை மனோன்மணி ஏற்றியதைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து உறவுகளும் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்தினர். இதில் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் பங்கேற்றனர்.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. லெப்கேணல் முரளி, லெப்ரினன் நல்லரசன், லெப்ரினன் தமிழவன் ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரியான அமலதாஸ் சர்மிளா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அதனைதொடர்ந்து நினைவஞ்சலி இடம்பெற்றதோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நான்கு மாவீரர்களின் தாயாரான சாமித்தம்பி வள்ளியம்மை கொடியினை ஏற்றி வைக்க இரு மாவீரரின் தாயாரான இராஜேந்திரம் பொன்ரோஸ் பொதுசுடர் ஏற்றி வைக்க அஞ்சலி நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், வன்னிவிளான்குளம், ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன.

மன்னார்

ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.



வவுனியா

வவுனியா, குருமன்காடு கலைமகள் மைதானத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான கந்தையா தனலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மலர் வணக்கத்திற்கான பொது நினைவுக்கல்லிற்கு கரும்புலி கப்டன் நளாயினி அவர்களின் தாயாரான பழனியாண்டி காளியம்மா அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், போராளிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.



மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றதோடு மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் நினைவுரையும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் இம்முறை மாவீரர்நாள் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்ரிக்கப்பட்டது. மாவீரர்களான மேஜர் அருந்தவகுமார், மேஜர் சத்திரபவன், அவர்களின் தாயார் அமரசிங்கம் சங்குபதி அவர் பிரதான சுடரை ஏற்றி ஆரம்பித்ததனை தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்மல்ல அஞ்சலிகளை செலுத்தினர் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

வவுனதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்கள் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று மாவீரர்களை மண்ணுக்கு வித்திட்ட தாய் சுப்ரமணியம் வெள்ளச்சியினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலியில் பங்கேற்றதோடு மாவீரர்களின் உறவினர்கள் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேநேரம் தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

முன்னதாக ஆரையம்பதி பகுதியில் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருந்த மாவீரர்கள் நாள் பதாகைகளை பொலிஸார் அகற்றியிருந்தனர். எனினும் பின்னர் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளுக்கு அவர்கள் எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை.

திருகோணமலை

மூதூர் கிழக்கு சம்பூர் – ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவீரர் குடும்பத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை

கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழகம்

தமிழகத்தில் மாவீரர்நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதேவேளை, நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் முன்னெடுக்கப்பட்டதோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு பொதுக்கூட்டமும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்தேசங்களில்

இதேவேளை, தாயக மக்கள் புலம்பெயர்ந்துள்ள அவுஸ்திரேலியா, கடனா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.