புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு சர்வதேச அழுத்தம் – வடக்கில் போராட்டங்கள் தீவிரமடையும் சாத்தியம்!



தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்காத வகையில், சர்வதேச மட்டத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்துவதற்கான அழுத்தங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஆரம்பக் காலம் முதலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தல்களின்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதியளித்திருந்தது. குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகமும் இந்த வாக்குறுதிகளை முழுமையாக நம்பியே அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தனர்.

எனினும், அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், புதிய அரசியலமைப்பு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் குறித்தோ ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எல்லை நிர்ணய யோசனையையே தற்போதைய அரசாங்கமும் கையில் எடுத்துள்ளது. இதற்காக விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட போதிலும், ஆளுங்கட்சியின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் இக்குழுவிலிருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வரலாற்று ரீதியாக, 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி பீடம் ஏறுவதற்காக ஜே.வி.பி ஆதரவளித்தபோது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும். அதற்காகத் தங்கள் ஜனாதிபதி வேட்பாளரான நிஹால் கலாப்பத்தியைக் கூட வேட்புமனுவிலிருந்து திரும்பப் பெற ஜே.வி.பி நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதிகாரத்திற்கு வந்த சந்திரிக்கா அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தனது இரு பதவிக் காலங்களிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயலாற்றினார்.பின்னர் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டபோதும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நிபந்தனையுடனேயே ஜே.வி.பி அவருக்கு ஆதரவளித்து ஒப்பந்தம் செய்தது. ஆனால், மஹிந்தவும் அதை ஒழிக்காமல், இரண்டு முறை மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற சட்டத்தை மூன்று முறை என நீட்டித்து புதிய திருத்தத்தைக் கொண்டுவந்து ஆட்சியை நிறைவு செய்தார்.

எனினும், நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான முறையில் அதிகாரப் பகிர்வை வழங்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்பதே ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதன்மை முழக்கமாக இருந்தது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், வடக்கு கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

வரலாற்றில் என்றென்றும் இல்லாதவாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்த வாக்குறுதிகளை முழுமையாக நம்பி தேசிய மக்கள் சக்திக்கும் பெருமளவில் வாக்களித்தனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் இதே நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன. ஆனால், ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், வடக்கிற்கு அளித்த இந்த மூன்று முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்து அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவொரு பேச்சும் தற்போது எழுப்பப்படவில்லை. குறைந்தபட்சம் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் கூட நடைபெறுவதாகத் தெரியவில்லை.

அண்மையில் நடைபெற்ற தெரிவுக்குழுவுக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராயும் இந்தக் குழுவின் மூலம் மேலும் காலத்தைக் கடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி தேர்தலை நடத்த முடியும். தேர்தல் முறையை மாற்றிவிட்டுத் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது. முதலில் தேர்தலை நடத்திவிட்டு தேவைப்பட்டால் முறையை மாற்றுங்கள். பழைய அரசாங்கங்கள் செய்த தவறையே நீங்களும் செய்கிறீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, வடக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பமாக இலங்கைத் தமிழரசுக்கட்சி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் போராட்டத்திற்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை முதன்மைப்படுத்தி ஒரே அணியாகச் செயற்படவும், வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அரசியல் ரீதியாகப் பணியாற்றவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.இதன் விளைவாக, வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள அடக்குமுறைச் சார்ந்த இரண்டு புதிய சட்டமூலங்களுக்கு எதிராகவும் வடக்கில் மாபெரும் மக்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பு அலை உருவாகுவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் தற்போது தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.