இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது!



அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமை மற்றும் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் இன்று (18) புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை சத்தாரத்ன தேரரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் புனித நகரிலுள்ள ருவன்வெலிசாய அருகே, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் குழுவினர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த இடத்திற்கு இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்த போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் தலையில் காயமடைந்த இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னதாகத் தலையிட்ட பொலிஸார், பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட பலரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இன்று இராஜாங்கனை சத்தாரத்ன தேரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.