
வேன் ஒன்றைக் கடத்திச் சென்ற கும்பலொன்றின் மீது எஹலியகொடை, பரகடுவ அங்குருவங்குவ பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வேன் கடத்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரினால் இன்று (28) முற்பகல் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதிக்கு அருகாமையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த உத்தியோகத்தர்கள் வேனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தபோதிலும், சந்தேகநபர்கள் அதனை நிறுத்தாமல் செலுத்திச் சென்றுள்ளனர்.
அவ்வேளையில் வேனைத் துரத்திச் சென்ற பொலிஸார், அதனை எஹலியகொடை, பரகடுவ அங்குருவங்குவ பிரதேசத்தில் வைத்து வழிமறித்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தித் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேகநபரைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அதில் அவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







.jpg)




