
அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளையும் நிதி ஒதுக்கீட்டு எண்களையும் மட்டும் காட்டி மக்களை ஏமாற்றாமல் கிண்ணியா, மூதூர், திருகோணமலை மற்றும் தெல்தோட்டை வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடைப் பிரச்சினையையும் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு 590.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டை விட 35.5 பில்லியன் ரூபாய் அதிகமாகும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர், நாங்கள் பாராளுமன்றத்தில் பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்தோம். ஆனால், அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றிற்கு இந்த அரசாங்கம் இன்னும் தீர்வு வழங்கவில்லை. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரக் கோரி நான் கடந்த வாரம் தனிநபர் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை முன்வைத்தேன். ஆனால், அரசாங்கத்திடமிருந்து எமக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதையிட்டு கவலையடைகிறேன்.
கிண்ணியா தள வைத்தியசாலையின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது. சுனாமிக்குப் பின்னர் வெறும் 10 ஆண்டு உத்தரவாதத்துடன் கட்டப்பட்ட தற்காலிக கட்டடத்திலேயே இன்றுவரை இந்த வைத்தியசாலை இயங்குகின்றது. வைத்தியசாலைக்கு மொத்தமாகவே ஒரு ஏக்கர் காணி மட்டுமே உள்ளது.
நோயாளர் கிளினிக் ஒரு பழைய நெற்களஞ்சியசாலையில் நடக்கின்றது. புதிய கட்டடத்திற்கு 400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், கட்டடம் கட்டப் போதிய காணி இல்லை. 2022 இல் ஒதுக்கப்பட்ட முனைச்சேனை விளையாட்டு மைதானக் காணியும் போதுமானதாக இல்லை.
கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி மொத்தம் 166 கட்டில்கள் மட்டுமே உள்ளன. ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டில்கள் ஒன்று கூட இல்லை. ஒரு வார்ட்டில் 15 முதல் 20 கட்டில்கள் மட்டுமே உள்ளன. வைத்தியர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது. இந்த வைத்தியசாலையில் ஒரு பிரேத அறை கூட இல்லை. முறையான கழிவு அகற்றும் வசதியும் இல்லை.
மாகாண சபையால் பெரிய செலவுகளைத் தாங்க முடியாது என்பதால், 2026 ஏப்ரல் 27 அன்று தம்புள்ளை தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியது. தம்புள்ளைக்குச் செய்ததைப் போல, கிண்ணியா தள வைத்தியசாலையையும் உடனடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும். இது எமது மக்களின் நியாயமான கோரிக்கையாகும்.
மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகள் 'ஏ' தர வைத்தியசாலைகளாகப் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், 'ஏ' தரத்திற்குரிய பௌதீக வளங்களோ, போதிய வைத்திய நிபுணர்களோ, ஆளணியோ இன்றுவரை வழங்கப்படவில்லை. பெயரளவில் தரம் உயர்த்துவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலையும் இதேபோல்தான் உள்ளது. அங்கு பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. புதிய இருதய சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும், அடிப்படை மருத்துவக் குறைபாடுகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
மேலும், 2026 மார்ச் 5 ஆம் திகதி கண்டி தெல்தோட்டை அநுர டேனியல் மாவட்ட வைத்தியசாலை, கலஹா மற்றும் பல்லேகம பிரதேச வைத்தியசாலைகள் குறித்தும் நான் இந்த சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த வைத்தியசாலைகளில் பாரிய தேவைப்பாடுகள் உள்ளதால், நோயாளர்கள் கண்டி மற்றும் பேராதனா வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும்போது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
'டித்வா' சூறாவளியினால் அப்பகுதி வீதிகள் பழுதடைந்துள்ள நிலையில், மேலதிக நோயாளர் அம்பியுளன்ஸ் வண்டிகளை வழங்குமாறும் நான் கேட்டிருந்தேன். என்றாலும் தெல்தோட்டை வைத்தியசாலையின் இந்தப் பிரச்சினைகளுக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை, அங்கு நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளது என்பது வேதனையளிக்கிறது.
மேலும் முஸ்லிம் தாதியர்கள் மற்றும் சுகாதார சிற்றூழியர்களின் ஆடைப் பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் இன்னும் உரிய தீர்வு வழங்கவில்லை. கடந்த 2025 திருகோணமலையில் இது தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, முஸ்லிம் தாதியர்கள் தமது மத அடையாளத்துடன் சீருடை அணிவதற்கு சட்டத் தடை இல்லை என அரசாங்கம் கூறியது. ஆனால், அதன் பின்னரும் முஸ்லிம்களின் கலாசார ஆடைக்கு எதிர்ப்புகள் கிளம்பின. கள யதார்த்தத்தில் இந்தப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கல்முனை, கிண்ணியா, நாகொட உட்பட சில இடங்களில் முஸ்லிம் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே அரசாங்கம் வெறும் வாய்மொழி மூலம் வழங்கும் உறுதிமொழிகளை நிறுத்தி, முஸ்லிம் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களின் ஆடை உரிமையைப் பாதுகாக்கத் தெளிவான சுற்றறிக்கையை வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.







.jpg)




