
இலங்கையின் தந்த யானைப் பரம்பரை சந்தித்துள்ள அழிவு மற்றும் ஆபத்துக்களில் இருந்து அவசியமான பாதுகாப்பை வழங்குவதற்காக அரசாங்கம் உள்நாட்டில் உடனடியாக சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுவிக்க வேண்டும் என்றும் அவற்றுக்கான பெறுமானம் மதிப்பீடு மற்றும் அங்கிகாரத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காவன்திஸ்ஸ யானை உயிரிழந்து நாளையுடன் (16) ஒரு மாதம் நிறைவடைவதனையொட்டி அந்த யானைக்கு புண்ணியம் சேர்ப்பதற்காக நாளை (16) மாலை தர்ம போதனை நிகழ்ச்சியும், நாளை மறுதினம் (17) அன்னதான நிகழ்வும் கல்கமுவ புதுருவகந்த ரஜமஹா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை அறிவிக்கும் வகையில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள ஆண் யானைகளில் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான யானைகளுக்கே தந்தங்கள் காணப்படுகின்றன. எனினும் குறிப்பிட்ட பரம்பரை தற்போது கடுமையான ஆபத்து அங்கீகாரம் மற்றும் அழிவை எதிர்நோக்கியுள்ளது.
அரசாங்கம் யானைகளை பாதுகாப்பதற்காக தாமதித்து ஒரு திட்டத்தை தொடங்கியுள்ள போதிலும் அது முறையற்றதாகவும் தெளிவான தேசிய திட்டமிடல் இன்றியும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அழியும் அபாயத்திலுள்ள யானைகளை பாதுகாப்பதற்காக பிரத்தியேகமான தேசிய வேலைத்திட்டம் அவசியமாகும். அரசாங்கம் தந்த யானைகளின் பட்டியலொன்றை தயாரித்துள்ளதாக கூறிய போதிலும் அது ஒரு அமைப்பை மட்டும் முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரே அமைப்பின் ஆலாசனையை மட்டும் பெறுவது பொருத்தமானதல்ல. சுற்றுடால் ஆர்வலர்கள் மற்றும் யானை நேசிப்பாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பட்டியலை மீண்டும் தயாரிக்கப்பட வேண்டும்.
அத்துடன் பெரிய யானைகள் மட்டுமன்றி சிறிய நடுத்தர அளவிலான யானைகள் உட்பட அனைத்து யானைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது நாட்டுக்கு ஊடகக் காட்சியமைப்புகள் தேவையில்லை. தெளிவான நடைமுறை செயற்திட்டமே தேவை. குறிப்பாக கால்நடை மருத்துவர்கள், வனஜீவ கால்நடை அதிகாரிகள் என 33 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 17 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.
எனவே, யானைகளைப் பாதுகாக்கும் வனஜீவிகள் திணைக்கள ஊழியர்களின் மனஉறுதியை உயர்த்தி, அவர்களது பிரச்சினைகளுக்கு அனைத்துத் துறைகளிலும் தீர்வு வழங்க வேண்டும். சிவில் பாதுகாப்பு மற்றும் பன்முகத் துறைப் பணியாளர்களை இதில் இணைத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும், யானை-மனித மோதல்கள் நிலவும் பகுதிகளில் அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர சுகாதார சேவை வேலைத்திட்டம் அத்தியாவசியமானதாகும்.
தந்த யானைகளைப் பாதுகாப்பதற்காகத் தனியான 'விரைவு அதிரடிப் படை' ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சி யோசனை முன்வைத்த போதிலும், அரசாங்கம் அதனை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய சிறப்புப் படைகள் இயங்கி வருவதாலும், நாட்டில் தற்போது போர் இல்லாத சூழல் நிலவுவதாலும், பாதுகாப்புப் படையினரில் ஒரு பகுதியினருக்கு வனஜீவிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி, தந்த யானைகளைப் பாதுகாக்கும் சிறப்புப் படையை உடனடியாக நிறுவ வேண்டும்.
'காவந்திஸ்ஸ' தந்த யானை செய்த தியாகத்திற்குப் பதிலாக, எஞ்சியுள்ள தந்த யானைப் பரம்பரையைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும். இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றார்.












