பிக்குகள் மற்றும் நீதிபதிகள் விவகாரம் – சஜித்தின் தலையீட்டைக் கோரும் பொதுஜன பெரமுன!
பௌத்த பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு தனித்தனி விவாதங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இவ்விரு விடயங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த பிக்குகளை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவங்கள், சில சட்ட அமுலாக்க நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த மதகுருமாருக்கு எதிரான சமூக ஊடகப் பிரசாரங்கள் குறித்தும் அக்கடிதத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளை வழங்கிய நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையையும் அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதங்களால் இப்பிரச்சினைகள் மீதான கவனம் திசைதிருப்பப்படக்கூடும் என்பதால், தாமதமின்றி இரண்டு பாராளுமன்ற விவாதங்களை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளார்.












.jpg)
