
எடுக்கும் சம்பளத்தில் வாழ முடியாத நிலையால் அரச ஊழியர்கள் வீதிகளில் இறங்குகின்றனர். அவ்வாறு வீதிகளில் இறங்கும் உழைக்கும் மக்களை ஜனாதிபதி எவ்வாறு அச்சுறுத்த முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உழைக்கும் மக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி, தபால் வாக்குகள் 0 வீதம் கிடைத்தது போல் பேசியிருந்தாலும், கடந்த தேர்தல்களில் அரச ஊழியர்கள் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரப் பெரும் பங்களிப்பைப் பெற்றுக் கொடுத்தனர். அவ்வாறு பங்களிப்புச் செய்த அரச ஊழியர்கள் இன்று வீதிகளில் இறங்கிப் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என இப்போது ஜனாதிபதி கூறுகிறார்,
ஆண்டு இறுதியில் பணவீக்க வேகம் 9வீதமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார். அரச ஊழியர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் வாழ முடியாத நிலையால் அவர்கள் வீதிகளில் இறங்குகின்றனர். அவ்வாறு வீதிகளில் இறங்கும் உழைக்கும் மக்களை ஜனாதிபதி எவ்வாறு அச்சுறுத்த முடியும், தேர்தல் மேடைகளில் அரச துறையின் சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை அதிகரிப்பதாகக் கூறியதால் மக்கள் நம்பிக்கையுடன் மகத்தான மக்கள் ஆணையைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
ஊடகங்கள் வாயிலாக நமது நாட்டின் விவசாய அமைச்சர் ஒரு வியப்பூட்டும் கருத்தை வெளியிட்டார். நெற் செய்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என விவசாய அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டார். நமது நாட்டில் 20 இலட்சம் ஏக்கர் காணி பயிரிடப்படும் நிலையில், உற்பத்தி செய்யப்படும் நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெருக்கடி நிலவுவதால் 33வீத நெல் செய்கையிலிருந்து விலக வேண்டும் எனக் கூறுகிறார். நெல் செய்கையில் ஈடுபடும் 21 இலட்சம் குடும்பங்களில் 6 இலட்சம் முதல் 7 இலட்சம் வரையான குடும்பங்களை நெற் செய்கையிலிருந்து விலகுமாறு அமைச்சர் லால் காந்த குறிப்பிடுகிறார்.
விசாயியின் மகன் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே தவிர, பயிர் செய்ய வேண்டாம் எனக் கூறுவதற்கல்ல.எனவே அமைச்சர் லால் காந்த நெற் செய்கை குறித்துக் கூறிய அந்தக் கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார்.







.jpg)




