தீபாவளியை முன்னிட்டு உலக வாழ் இந்துக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து!


இந்துப் பெருமக்களால் மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, மிக ஆழமான ஆன்மீக மற்றும் தத்துவார்த்தப் பின்னணியைக் கொண்ட ஒரு நன்னாளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அறியாமை எனும் இருள் அகன்று மெய்ஞான ஒளி பெருகவும், தீமை வீழ்ந்து நன்மை ஓங்கவும் வேண்டி, அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியைப் பறைசாற்றும் வரலாற்றுப் பெருமையைக் கொண்டது இத்தீபாவளித் திருநாளாகும்.

அதிகாரத்தின் துணையோடு அடக்குமுறையை ஏவ முயன்ற கொடிய எண்ணங்களைத் தகர்த்தெறிந்ததை நினைவுகூரும் இத்தீபாவளியின் ஆழமாகப் புதைந்துள்ள தத்துவார்த்தப் பொருள், வேறெந்தக் காலத்தையும் விட தற்போதைய சமூக-பொருளாதாரச் சூழலில் நாம் வாழும் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமுடையதாக அமைகிறது.

மக்களின் பொருளாதார நெருக்கடிகள், சுதந்திரமாக வாழும் உரிமை, சட்டத்தின் இறைமை மற்றும் இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாகத் திகழும் சனநாயக இறையாண்மை ஆகியவற்றை நசுக்கும் வகையில் பல சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டும், நிறைவேற்றப்பட முயற்சிக்கப்பட்டும் வரும் இச்சூழலில், சமூகத்தைச் சூழ்ந்துள்ள ஓர் அறியாமை இருளையே நாம் உணர்கிறோம். இது மக்களின் நல்வாழ்வுக்குப் பதிலாக அல்லல்களையே அதிகரிக்கச் செய்கிறது.

இந்த அநீதியை வீழ்த்தி, சமூகத்தை இருளிலிருந்து ஒளிக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் இட்டுச் செல்வது தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரினதும் தலையாய கடமையாகும். அக்கடமையை மிகுந்த பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவதற்குத் தேவையான உறுதியையும் திட்டமிடலையும் வகுத்துக் கொள்ள, தீபாவளி உணர்த்தும் தத்துவம் நமக்கு ஒரு வழிகாட்டியாகவும் சான்றாகவும் திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் மொழிகளைக் கொண்டதாக அமையப்பெற்ற எமது தாய்நாட்டைச் சிறந்ததொரு தேசமாகக் கட்டியெழுப்ப, தற்போதைய சூழலைச் சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றுவதற்கான திடகாத்திரமான மனவலிமையும் வழிகாட்டலும் இத்தீபாவளித் திருநாளில் அனைவருக்கும் கிடைக்கப் பெறட்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.