
தென்கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களின் விபரங்களை வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், ஹ்வாசோங் (Hwaseong) நகரின் ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பிரதேசத்தில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இருவர் மீது 7.5 தொன் எடையுடைய லொறியொன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்தது.
வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் விபத்து இடம்பெற்றவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்விபத்து மற்றும் மரணங்கள் தொடர்பில் 'Hwaseong Seobu' பொலிஸ் நிலையத்தினால் சியோல் (Seoul) நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன:
தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன (வயது 39) – கொடகவெல, ரன்வல பிரதேசம்.
மகேஸ்வரன் பிரசாந்தன் (வயது 31) – வலப்பனை, ஹல்கிரான்ஓய பிரதேசம்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் லொறியைச் செலுத்திய 50 வயதுடைய சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தொழில்முறை அலட்சியத்தினால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய சி.சி.ரி.வி காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை சியோலிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.







.jpg)




