(தனியன்)
மட்டக்களப்பில் நித்தியானந்தரின் அறக்கட்டளை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக அண்மையில்
இந்த தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டது. (http://www.battinews.com/2012/05/blog-post_18.html )
அந்தச் செய்தி பல்வேறு கருத்துரையாடலுக்கு வழிவகுத்து உள்ளதுடன்
இந்த நிலையம் உண்மையில் மட்டக்களப்புக்குத் தேவைதானா என்றும் சிந்திக்கவைத்துள்ளது.அந்தச் செய்தியைப் பார்த்து
கருத்துச் சொன்னதில் ஒரு சில குறிப்பிட்டவர்களைத் தவீர அனைவருமே ஒட்டு மொத்தமாக இது ஒரு கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தப்போகின்றது அதனால் அந்த நிலையம் அகற்றப்படவேண்டும் என்றே ஆதங்கப்பட்டு இருந்தார்கள்.
( இந்த ஆக்கமானது எமக்கு எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் அனுப்பபட்டது )
இந்த நிலையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன?
இதை அமைத்தவர்களே முன்னுக்கு பின்னான முரண்பாடான கருத்துக்களை சொல்லுகிறார்கள்.
ஆரம்பத்தில் கலாச்சாரத்தை உணர்த்துதல் ,பிரமச்சாரியத்தை உணர்த்துதல் ,கோயில்களை புனருத்தானம் செய்தல் போன்றவையே நோக்கம் என்றார்கள். ஆனால் இடையே ஒரு வைத்தியர் எங்கள் நிலையத்திற்கு வாருங்கள் நீரழிவை சில வாரங்களிலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன் என்கிறார்.ஆக இவர்களின் நோக்கம் சேவை செய்தல் என்ற
பெயரில் ஆரம்பித்து அப்புறம் நிலையத்திற்கு வாருங்கள் நோயைச் சுகமாக்குகிறேன் வேறு உதவிகள் செய்கின்றேன் என்று மக்களை ஏமாற்றி கூட்டுச் சேர்த்தல்.
எதற்காக மக்களைக் கூட்டுச் சேர்க்கவேண்டும்?
இது ஒரு மாபெரும் வியாபார யுக்தி. நித்தியானந்தவிற்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன .அதில் ஒரு சிறு துளியைத்தான் (2.5கோடி)
மட்டக்களப்பு மக்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் .உண்மையில் இது அவரின் ஒரு முதலீடு. சேவை என்ற பெயரில் மக்களைக் கவருதல் அதன்
பின்பு அவர்தான் கடவுள் என்று மக்களுக்கு ஒரு பிரமையை ஏற்படுத்துதல். மக்களும் அதனை நம்பி நித்தியானந்தாவே எல்லாம் என்று நம்பிய
பின்பு அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று துடிப்பார்கள். அவ்வாறு அவரை நேரடியாக இலகுவாகப் பார்த்துவிட முடியாது.
அவரின் தியான நிகழ்ச்சிகளுக்குப் போவதன் மூலம் தான் பார்க்கலாம். அதற்க்காக அவர்கள் செலவழிக்க வேண்டியது பல லட்சங்கள்.
கொஞ்சம் வசதியானவர் என்றால் பல மில்லியங்களைக் கொடுத்தால் அவர் வீட்டிற்கே வந்து பல கிரிகையை நடத்தி விட்டுப் போவார்.
இப்படித்தான் அவரின் பல கோடிகள் சொத்து சேர்க்கப்பட்டது. இப்போது வெறும் 2.5 கோடிகளை முதலிட்டு பிறகு மட்டக்களப்பு
மக்களிடம் இருந்தே பல கோடிகளை சம்பாதித்து விடுவார்.
அவர் ஒரு உண்மையான சாமியார் என்றால் அவரிற்கு எதற்கு பல கோடிகள் சொத்து.
கொடுக்கின்ற பிரசாதத்தை வாங்கிக் கொண்டு தரிசனம் கொடுப்பதுதானே சாமி. சந்திப்பதற்கே பல லட்சங்களை செலவழிக்கச்
சொல்லுபவர் எப்படி சாமியாக முடியும்?
இவரினால் எப்படி இவ்வளவு இலகுவாக மக்களை ஏமாற்ற முடிகிறது?
ஏமாற்றுவதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் இந்துமதம். தியானம் ,யோகா,தோஸ்த்திரங்கள் போன்ற இந்துமதம் சார்ந்த
நெறிகளை பழகி மக்களுக்கு சொல்லிக் கொடுத்தல். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு தான்தான் கடுவுள் என்ற பிரமையை
ஏற்படுத்தி விடுதல்.இவ்வாறு மக்களை ஏமாற்றி தன் வசப் படுத்திய பின்பு அவர்களை மெல்ல மெல்ல சமூக உடன்பாட்டில் இருந்து விலக வைத்து
விடுவதும் இவரின் யுக்தி. உண்மையில் அவரை கடவுள் என்று நம்பி இருப்பவர்கள் வெளி உலகத்தில் வாழ்க்கையை வென்றது
போன்று காட்சியளித்தாலும் , தன் குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களாகவே இருப்பார்கள்.
மேலும் தனது செயற்பாடுகள் மூலம் நோயைக் குணப்படுத்தலாம் என்று மக்களை நம்பச் செய்தல்.மட்டக்களப்பு அறக்கட்டளை நிலையத்தில் இருக்கும்
ஒரு வைத்தியரும் இதைச் சொல்லியிருந்தார் .அவர்கள் சொல்லுவதைப்போல நீரழிவு ,உயர் குருதியமுக்கம் என்பவற்றை அவர்களால் கட்டுப்படுத்த முடியுமா?
ஆம் , அவர்களால் முடியும்.
அந்த நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளோடு முக்கியமாக உணவுக்கட்டுப்பாடு , மன அழுத்தத்தைக் குறைத்தல் , உடற் பயிற்சி செய்தல்
போன்றவையும் முக்கியமாகும். நோயாளி ஒருவர் அந்த நிலையத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடும்போது மன அழுத்தம் குறைகின்றது,
யோகாவில் ஈடுபடுவது உடற்பயிற்சியாகின்றது , மேலும் மாமிசங்கள் சாப்பிடாமல் விட்டு மரக்கறிகள் உண்பதன் மூலம் நல்ல
உணவுக்கட்டுப்பாடு கிடைக்கின்றது.அதனால் அந்த நோய்கள் கட்டுப்பாடாகின்றது. இதில் நித்தியானந்தரின் மாயங்கள் எதுவும் இல்லை .
மேலும் அந்த உணவுப் பழக்கம் ,தியானம் ,யோகா என்று எதுவுமே நித்தியானந்தருக்கு சொந்தமானதல்ல . இது எமது பாரப்பரியத்தில் உருவானவை. ஆனால் அவற்றை தன கண்டுபிடிப்பு என்று நித்தியானந்தர் வெளிக்காட்டுவது எமது கலாச்சார
பாரம்பரியத்தையே மாற்றிப்போட்டு விடும்.
அவரின் வியாபர யுக்தியின் திட்டமிடலில் அடுத்த நகர்வுதான் மட்டக்களப்பில் தன் நிலையத்தை அமைத்தது. அவர் யாழ்ப்பாணத்தில் நிலையம் அமைத்திருந்தால் கலாச்சார அதிகாரிகள் இந்நேரம் அதை இழுத்து மூடி
இருப்பார்கள்.அதையும் தாண்டி அவர் அமைத்திருந்தால் அது இரவோடு இரவாக உடைக்கப் பட்டிருக்கும்.
வன்னி மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கஷ்ட நிலையில் இருப்பதால் அவர்களிடம் லாபம் சம்பாதிக்க முடியாது.
கொழும்பிலே அமைத்தால் இந்நேரம் பல்வேறு சட்டச் சிக்கல்கள் எழும்பியிருக்கும். அதனால்தான் மட்டக்களப்பை தெரிவு செய்து வெற்றி கரமாக ஆராம்பித்தும் இருக்கிறார்.அதிகாரிகளும்,இந்து அமைப்புக்களும்
இதுபற்றி கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.
சேவை செய்வதுதான் இவரின் உண்மையான நோக்கம் என்றால் வன்னி மக்கள்தான் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல்
இருக்கிறார்கள் .அவர்களுக்குத்தானே முதலில் சேவை செய்ய வேண்டும் . அதை விட்டு மட்டக்கலப்பில் எதற்காக
சேவை செய்ய வேண்டும். மட்டக்களப்பில்தான் எதிர்ப்பு இல்லாமல் இலகுவாக நிலை கொள்ளமுடியும் என்ற நம்பிக்கைதான் .
இதே வேலையைச் செய்துகொண்டு ,`வாழுங்களைப் பயிற்சி` போன்ற வேறு பல நிலையங்கள் ஏற்கனவே பல இடங்களில் ஆரம்பிக்கப் பட்டாலும்
அவற்றிற்கு எந்த எதிர்ப்பும் இதுவரை வரவில்லை. காரணம் அவற்றின் ஸ்தாபகர்கள் நித்தியானந்தர் போல பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக
வீடியோ ஆதாரத்துடன் பிடிபடவில்லை .
ஆனாலும் அந்த வீடியோ போலியானவை என்பது நித்தியானந்தர் மற்றும் அவர் சார்ந்தோரின் வாதம்.
அவர்கள் சொல்லுவது போல அது போலியானதே என்றால் இத்தனை கோடிகளை சொந்தமாக வைத்திருக்கும் ஒருவர் தான் இருப்பது போன்ற
பாலியல் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி மீது வழக்குப் போட்டு தான் உத்தமனானவர் என்று நிரூபிக்காமல் போனது ஏன்?
அண்மையில் மடாதிபதி ஒருவர் ரஞ்சிதாவையும் நித்தியானந்தரையும் தொடர்பு படுத்திப் பேசியதற்காக ரஞ்சிதாவே வழ்கக்குப் பதிவு செய்தார்.
பேசியதற்கே இவ்வளவு பொங்கி எழும்பும் அம்மணி ரஞ்சிதா , ஜோடியாக இருப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்ட பின்பு பொங்கி எழும்பாமல்
ஓடி ஒளிந்ததற்கான காரணம் என்ன?
உண்மையிலே இவ்வாறு போலியான ஒரு வீடியோவை இவ்வளவு துல்லியமாக தயாரிக்க முடியும் என்றால் ,இந்நேரம் உலகத்தில்
உள்ள பல பிரபலங்கள் இருப்பது போன்று வீடியோ தயாரித்து ஒரு நாளிலேயே கோடிஸ்வரர்களாகி விடுவார்கள் தொழில்நுட்ப
வல்லுனர்கள் .
ஓடி ஒளிந்ததற்கு காரணமாக நித்தியானந்தர் கூறுவது எதிரிகள் அவரை கொலை செய்து விட்டு வரலாற்றை மாற்றி விடுவார்களாம்.
பரவாயில்லை இந்த உலகத்தில் கடவுளையே அடித்துக் கொள்ளும் வல்லமை கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள் போல?
ஆக மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ...
மக்களை ஏமாற்றி பல கோடிச் சொத்துக்களை தன் பெயரில் வைத்திருக்கும் ஒருவரை நீங்கள் சாமியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
ஒரு பெண்ணுடன் திருட்டுத் தனமாக பாலியல் செய்கையில் ஈடுபடும் ஒரு சாதாரண மனிதரை உங்கள் பிரமச்சாரிய குருவாக ஏற்றுக்
கொள்ளத்தான் வேண்டுமா?
மட்டக்களப்பு வாழ் மக்களே எமது சமூகத்தினிடையே ஊடுருவி இருக்கும் இந்த வியாபார யுக்திக்கு மக்கள் பலியாகாமல் இருக்க இதை முளையிலே
கிள்ளி எரிய வேண்டும்.மட்டக் ளப்பு மக்களை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்ற அவர்களின் நம்பிக்கையை தவிடு பொடி ஆக்குங்கள் .
மட்டக்களப்பு இந்து அமைப்புக்களே கொஞ்சம் கவனமெடுங்கள். உங்கள் எதிர்ப்புக்களை வெளியிடுங்கள்.








.jpg)



.jpeg)
.jpeg)