கும்ப இராசி அன்பர்களே… 
19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். குரு உங்கள் இராசிக்கு தன, லாபாதிபதி. அதாவது, 2-ம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி ஆவர். 6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித்து பயப்பட வேண்டாம். 6-ல் குரு அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும், 2-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். இதனால் இந்த இடங்கள் பலம் பெற்று யோகத்தை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் பேச்சை துச்சமாக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்து கொள்வர். தன, தான்யம் உங்களை நாடிவரும். பேச்சால்  எதையும் சமாளித்து பிரச்னைகளை ஓவர் டேக் செய்துக்கொண்டு போய்விடுவீர்கள். 

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல்ல ஆதாயம் உண்டு. தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர். இதுவரை காசு இல்லையே என்று கை பிசைந்து கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகிறீர்கள். விரயங்கள் தவிர்க்கப்படும். தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் குறைந்து விடும். வீடு, மனை வாங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். கூட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். உங்களை பார்த்து கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும். பொதுவாக குரு 6-ல் இருந்தாலும், கவலையே படவேண்டாம். காரணம், குருவின் பார்வைதான் பவராக வேலை செய்யும். முக்கியமாக சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். 

சரி. 6-ல் இருக்கும் குரு பகவான், என்ன ஆலோசனை சொல்கிறார்? என கேட்டால், “தேடி வரும் வீண் சண்டையை பெரிதுப்படுத்தாமல் விட்டு விடு. எதிரியே சோர்ந்து சமாதானமாக போய் விடுவான். வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்திலும் கவனம் தேவை.” என்பதே குருவின் ஆலோசனையாகும். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் வணங்கி வெற்றி நடைபோடுங்கள். ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.  குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.