தனுசு இராசி அன்பர்களே… 
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். “குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம். குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார். 8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது. விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும். அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள். 

இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும். குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும். உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும். பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு. சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும். 

பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள். கவலையோ, பயமோ அடைய தேவையில்லை. 8-ல் குரு இருந்தாலும்,  2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது. ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும். சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.  குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.